குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.;
உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
உடுமலை அரசு மருத்துவமனை
உடுமலை வ.உ.சி.வீதி, கச்சேரி வீதி சந்திப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் ஓடுகள் வேயப்பட்ட பழைய கட்டிடம் உள்ளது.
இந்த பழைய கட்டிடத்தின் முன்பகுதியில் திறந்த வெளியில் பழைய துணிகள், பிளாஸ்டிக் அட்டைபெட்டிகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும், அங்குள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசிக்கொண்டிருந்ததால் அந்த மரக் கிளைகள் வெட்டப்பட்டு பல நாட்கள் ஆகிறது. ஆனால் அந்த மரக்கிளைகள், இலைகள் காய்ந்த நிலையில் அந்த இடத்தில் குப்பையாக கிடக்கிறது. அந்த இடத்திற்கு அருகில் மண்குவியலும் உள்ளது.
சுகாதார சீர்கேடு
இவ்வாறு நீண்ட நாட்களாக அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு நேற்று காலை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே புகையாக இருந்தது. குப்பைகளை குவித்து தீ வைக்கப்பட்ட இடம், மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவை ஒட்டி உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை பல நாட்களாக குவித்து வைப்பது, தீ வைப்பது ஆகியவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை குவிக்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.