கடம்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது
கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் தி.மு.க.அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
கடம்பூர் சிதம்பரபுரத்திலுள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வீடு முன்பு, அவரது தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கடம்பூர் நகர செயலாளர் வாச முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு மானியம் ரூ.100, மகளிருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை, உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றக்கோரியும், தி.மு.க அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி, பண்டாரவிளையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் ஆறுமுகநேரி, உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.