தேன்கனிக்கோட்டை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தேன்கனிக்கோட்டை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-28 16:49 GMT
தேன்கனிக்கோட்டை:
தனியார் ஏ.டி.எம். மையம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்னங்கூரில் ஓசூர் சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த மையத்திற்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். 
அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அவர்கள், திடீரென ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று சென்றது. இதனால் போலீசார் செல்வதாக நினைத்த அந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பல லட்சம் ரூபாய் தப்பியது
இந்தநிலையில் நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சிலர் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததையும், அருகில் அரிவாள் ஒன்று கிடந்ததையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் ஏ.டி.எம். மைய பொறுப்பாளரான அஞ்செட்டி ராமர் கோவில் பகுதியை சேர்ந்த மோகன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 
போலீசார் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதும், இரவு நேர காவலாளி நியமிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் இதனை அறிந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றபோது, ஜீப்பின் சத்தம் கேட்டு அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரிந்தது. இதனால் எந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வலைவீச்சு
இதையடுத்து போலீசார் அங்கு கிடந்த அரிவாளை கைப்பற்றினர். பின்னர் இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் இந்த தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் இரவு காவலாளி மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை என்றும், இதனால் அடிக்கடி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்