பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் பல்லடம் சாலையில் தடுப்பூசி முறையாக வழங்கப்படுவதில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-28 16:49 GMT
வீரபாண்டி
திருப்பூர் பல்லடம் சாலையில் தடுப்பூசி முறையாக வழங்கப்படுவதில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி 
திருப்பூர்-பல்லடம் சாலை பாரதி வித்யாலயா பஸ் நிறுத்தம்  மற்றும் அதனை சுற்றியுள்ள பாரதிநகர், சுண்டமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 
பாரதி நகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் பலரும் காத்திருந்தனர். 
சாலை மறியல் 
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் வாரம் ஒருமுறை 50 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுவதாக கூறி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென்று பல்லடம் சாலையில் அனைவருக்கும் தடுப்பூசியை முறையாக வழங்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ராஜேந்திரன் மற்றும் மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பதர் நிஷா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விரைவாக அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்