கூடலூரில் ஒர்க் ஷாப்பை சூறையாடிய காட்டு யானைகள்
கூடலூரில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் ஒர்க் ஷாப்பை சூறையாடின. அங்கிருந்த கார்களின் கண்ணாடிகளையும் உடைத்து நொறுக்கின.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் வனப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இவ்வாறு வரும் காட்டு யானைகள் வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோக்கால் மலையில் இருந்து வெளியே வந்த 9 காட்டு யானைகள் கூடலூர் கெவிப்பாரா தனியார் தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்தன.
தொடர்ந்து நள்ளிரவு துப்புகுட்டிபேட்டை பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தின.
தொடர்ந்து ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு சாலையோரம் இருந்த ராஜா என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்புக்குள் புகுந்தன. பின்னர் காட்டு யானைகள் ஒர்க் ஷாப்பின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்தன.
தொடர்ந்து காட்டு யானைகள் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தின. ஒர்க் ஷாப்பில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து அங்கிருந்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
இதற்கிடையில் கடைக்கு வந்த ஊழியர்கள் ஒர்க் ஷாப்பை காட்டு யானைகள் சூறையாடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த பகுதி மக்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் ஒர்க் ஷாப்பை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ராஜா உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணி கிராமத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.