திருடிய 3 பேரை போலீசார் கைது
திருப்பூரில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், ஜூலை.29-
திருப்பூரில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
செல்போன்கள் திருட்டு
திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 26. இவர் திரு.வி.க.நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். கடந்த 24ந் தேதி மாரிமுத்து தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 செல்போன்களை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். மாரிமுத்து தனது வீட்டு கதவை தாழிடாமல் வைத்திருந்ததால் மர்ம ஆசாமிகள் செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாரிமுத்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாநகர பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் கண்காணிப்பில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தங்கவேல் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
இந்த நிலையில் செல்போன் திருட்டு தொடர்பாக மாஸ்கோ நகரை சேர்ந்த கார்த்தி 28, அனுப்பர்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் 24, மாஸ்கோநகரை சேர்ந்த செல்வக்குமார் 19 ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார்த்தி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருட்டு, வழிப்பறி, சங்கிலி பறிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.