தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் இலக்கை மிஞ்சியது குறுவை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி நடைபெற்றுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தற்போது 27 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக நடவு நடைபெற்றுள்ளது.;
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த ஆண்டு 8 ஆண்டுகளுக்குப்பிறகு மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும் குறுவை சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக அளவு நடைபெற்றது.
வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரத்து 370 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவவை விட 37 சதவீதம் கூடுதலாக சாகுபடி நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக அளவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் குறுவை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு தொகுப்பு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்தியது.
அதன்படி இந்த ஆண்டும் இலக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் வரை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 27 ஆயிரம் ஏக்கர் நடவுப்பணிகள் நடைபெற்றுள்ளது. குறுவை சாகுபடி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த மாதம் 31-ந்தேதி வரை குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர் தாலுகா பகுதிகளில் மட்டும் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதர தாலுகா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் இந்த ஆண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.