சிறுமியை திருமணம் செய்ததாக கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் ‘போக்சோ’ வழக்கில் கைது
சிறுமியை திருமணம் செய்ததாக கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வல்லம்,
தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது40). துணிக்டைகளுக்கு வேலை ஆட்களை சேர்த்து விடும் தனியார் நிறுவன முகவராக பணியாற்றி வந்த இவர் 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, துன்புறுத்தி வந்ததாக கடந்த ஆண்டு வல்லம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பால்ராஜ், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால்ராஜ் தான் திருமணம் செய்த சிறுமியை கடத்தி சென்று, துன்புறுத்தி வந்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சை அருகே சிறுமியுடன் தலைமறைவாக இருந்த பால்ராஜை நேற்று முன்தினம் போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது மீண்டும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தஞ்சை சிறையில் அடைத்தனர். சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.