பழங்குடியின குடியிருப்பில் கலெக்டர் ஆய்வு
போடி அருகே பழங்குடியின குடியிருப்பில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.;
தேனி:
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு அரசு கட்டிக் கொடுத்த பழமையான தொகுப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த பகுதியில் நகராட்சி குப்பைக்கிடங்கு அமைந்துள்ளதால், சுகாதாரமற்ற சூழலில் 45 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு மாற்று இடத்தில் குடியிருப்பு கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அங்கு நிற்கும் மரங்களை அகற்றாததால் குடியிருப்புகள் கட்டப்படாமல் உள்ளது.
இதுகுறித்த கோரிக்கையை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இதையடுத்து புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், அங்கு வசிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதை அறிந்து அவர்களுக்கு தடுப்பூசி குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், வலசத்துறை சாலை முதல் மல்லிப்பட்டி வரை ரூ.30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.