சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
தேனி:
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் தர்மர் (வயது 45). சமையல் தொழிலாளி. இவர், கடந்த 2017-ம் ஆண்டு 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு அளித்தார்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கில் தர்மருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அந்த சிறுமிக்கு மாநில அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தர்மரை போலீசார், பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.