மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் - தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சின்னதம்பி, நிர்வாகிகள் நாகூரான், ரஹ்மான், ராஜேந்திரன், சித்ரவள்ளி ஆகியோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீன் வளத்தை நம்பியும், மீன்பிடி, மீன் விற்பனை, கருவாடு விற்பனை உள்ளிட்ட அதை சார்ந்த தொழில் புரியும் மீனவ தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
மீனவ தொழிலாளர்கள் நலன் கருதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். மீனவர் நலவாரிய அட்டைகளை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். இந்திய கடல் மீன்வள மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் மீன் விற்பனையாளர்களுக்கு வட்டியில்லா சிறு தொழில் கடன் வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை லகூன் தீவை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். மீன் விற்பனையாளர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்க வேண்டும். மீனவ குடும்பங்களுக்கு குடிமனை, குடிமனை பட்டா வழங்கி 400 சதுரடியில் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.