ஆட்டோ பயணிகளிடம் வழிப்பறி முயற்சி; 3 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே ஆட்டோ பயணிகளிடம் வழிப்பறி செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே ஆட்டோ பயணிகளை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி முயற்சி
ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கனகராஜ் (வயது 38). இவர், தனது ஆட்டோவில் குறுக்குச்சாலையில் இருந்து கீழமுடிமண் கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கே.சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த பயணிகளிடம் அந்த 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டோ டிரைவரும், பயணிகளும் சுதாரித்துக் கொண்டு அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதனால் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவட்டனர். இதுகுறித்து கனகராஜ் ஓட்டப்பிடாரம் போலீசாரிடம் புகார் செய்தார்.
3 பேர் சிக்கினர்
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குறுக்குச்சாலை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கசங்காத பெருமாள் கோவில் அருகே ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள், போலீசை கண்டதும் வண்டியை திருப்பி தப்பி ஓட முயன்றனர். இதில் நிலைதடுமாறி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதையெடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் இவர்கள் 3 பேரும் ஆட்டோவை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.
கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் தூத்துக்குடி பெரியசாமிநகரைச் சேர்ந்த முனியசாமி மகன் ஜெகன்குமார் (23), சத்யா நகரைச் சேர்ந்த முருகன் மகன் விஜய் என்ற பாண்டி (21), கண்ணன் மகன் சீனு (21) என தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.