நாகை அருகே குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி
நாகை அருகே குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம்,
நாகை அருகே பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மகன்கள் வித்யாதரன் (9), சுவாதீஷ் (6). இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி பனங்குடி கிராமத்தில் உள்ள ஆணைக்குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கக்கோரி இறந்த சிறுவர்களின் பெற்றோர் அரசு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுவர்களின் பெற்றோருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ஒரு சிறுவனுக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்காக காசோலையை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். அப்போது முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.