15 கி.மீ. தூரம் நடந்து சென்று குறை கேட்டார்: மலைக்கிராம மக்களுக்கு உதவ 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறைகளை கேட்டார். அப்போது அவர்களுக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்று கூறினார்.

Update: 2021-07-27 17:25 GMT
ராயக்கோட்டை:

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் வந்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த அவர் இரவு கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் தங்கினார். 
தொடர்ந்து நேற்று கொடகரை, காமகிரி, மூக்கன்கரை மலைக்கிராமங்களில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
108 அவசர ஆம்புலன்ஸ் வசதி 
தமிழகத்தில் 34-வது மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான் ஆய்வு செய்து வருகிறேன். இங்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சூளகிரி ஒன்றியத்தில் ரூ.2.50 கோடியில் 9 புதிய அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். 
இவர்கள் சுகாதார நிலையம், 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை என பல கோரிக்கைகள் வைத்துள்ளனர். தற்போது கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
ஆரம்ப சுகாதார நிலையம்
பொதுவாக 30 ஆயிரம் பேர் உள்ள இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க முடியும். இந்த பகுதியில் உள்ள மலைக் கிராமமான காமகிரி பகுதியில் 9 ஆயிரம் பேர் உள்ளனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க மத்திய அரசின் அனுமதி தேவை. இதை நான் கவனத்தில் எடுத்துக் கொண்டு சுகாதாரத்துறை செயலாளர் டெல்லி செல்லும் போது இதை வலியுறுத்தி பெற்று தர நடவடிக்கை எடுப்பேன். இன்னும் 6 மாத காலத்துக்குள் இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் கட்டமாக இங்கிருந்து அருகில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வர ஆம்புலன்ஸ் வசதி 10 நாட்களுக்குள் அமைத்து தரப்படும்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நாள்தோறும் தங்களால் இயன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி 
முன்னதாக காமகிரி கிராமத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் தமிழக முதல்-அமைச்சர் பெண்களுக்காக அறிவித்த திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விளக்கி கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து மூக்கன்கரை மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது கால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்கு செயற்கை கால் பொருத்த உதவ வேண்டும் எனக் கேட்டார். இதையடுத்து முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ரூ.2 லட்சத்தில் செயற்கை கால் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவருக்கு உறுதி அளித்தார்.
15 கி.மீ. நடந்து சென்றார் 
தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட மூக்கன்கரை மலைக்கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணமாக சென்றார். அப்போது வழியில் உள்ள மலைக்கிராம மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் கொடகரை மலைக்கிராமத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் மலைக்கிராம மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். 

மேலும் செய்திகள்