பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1 பதினொரு லைன்ஸ் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பசுந்தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் அலறியடித்தப்படி ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்த அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு அடியில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த சிறுத்தைக்கு 3 வயது இருக்கும், உடலில் காயங்கள் உள்ளதால் வனவிலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் சிறுத்தை இறந்ததா அல்லது உடல் நலக்குறைவால் இறந்ததா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்றனர்.