கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ராஜினாமா

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார்.

Update: 2021-07-26 21:19 GMT
பெங்களூரு:

3 நாள் மட்டுமே பதவி

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.  பா.ஜனதா 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.  ஆட்சி அமைக்க இன்னும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எடியூரப்பாவுக்கு கவா்னராக இருந்த வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் மூன்றே நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அதன் பிறகு 14 மாதங்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

2 ஆண்டு நிபந்தனை

இதனால் கர்நாடகத்தில் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி அவர் 4-வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றார். அப்போதே அவருக்கு 76 வயதாகி இருந்தது. வேறு முக்கிய தலைவர்கள் இல்லாத காரணத்தாலும், எடியூரப்பாவை புறக்கணிக்க முடியாததாலும் பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை தயக்கத்துடன் முதல்-மந்திரியாக நியமனம் செய்தது. 

ஆனால் அப்போது எடியூரப்பாவுக்கு நிபந்தனை விதித்த பா.ஜனதா மேலிடம் உங்களுக்கு வயதாகிவிட்டதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்று முதல்-மந்திரி ஆனார். 2 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் எடியூரப்பா பதவி விலகுவார் என்று பரவலாக பேசப்பட்டது.

கண்ணீர்விட்ட எடியூரப்பா

இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக பா.ஜனதா அரசின் 2 ஆண்டுகள் சாதனை கொண்டாட்ட விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடியூரப்பா, தனது 2 ஆண்டு கால சாதனை குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் பேசினார்.

அதில் பேசிய எடியூரப்பா, நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்குகிறேன் என்று கூறிவிட்டு பேச்சை நிறைவு செய்தார். அப்போது அவர் அழுதார். கண்களில் கண்ணீர் சாரை சாரையாக வழிந்தோடியது. கண்களை துடைத்துக்கொண்டு அவர் தனது காரில் அங்கிருந்து பகல் 12.30 மணியளவில் ராஜ்பவனுக்கு வந்தார்.

கவர்னரிடம் கடிதம்

அங்கு கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்த எடியூரப்பா, ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அந்த ராஜினாமாவை கவர்னர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். அதற்கான அங்கீகார உத்தரவையும் கவர்னர் வெளியிட்டார். மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு எடியூரப்பாவை கவர்னர் கேட்டுக்கொண்டார். 

கவர்னர் மாளிகையில் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு எடியூரப்பா வெளியே வந்தார். அங்கிருந்து நூற்றுக்கணக்கான கார்கள் புடைசூழ எடியூரப்பா குமரகிருபா ரோட்டில் உள்ள தனது காவேரி வீட்டிற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வந்தனர்.

போராட்டம்

எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து சிவமொக்கா, மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கைகளில் எடியூரப்பாவின் உருவப்படத்தை பிடித்தப்படி எடியூரப்பா வாழ்க... வாழ்க... என கோஷம் எழுப்பினர். மேலும் பா.ஜனதா மேலிடத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். 

எடியூரப்பாவின் சொந்த தொகுதியான சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதி பா.ஜனதாவினர் பஸ் நிலையத்தில் கூடி அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். பா.ஜனதா மேலிடத்தை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த முதல்-மந்திரி யார்?

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத்ஜோஷி, மாநில கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் பிரகலாத்ஜோஷி, பி.எல்.சந்தோஷ் ஆகிய இருவரும் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். 

முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகிய 2 பேரும் பெரும்பான்மை சமூகமாக உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அதே சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் தான் அந்த மக்களின் ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கணக்கு போடுகிறது.

மேலும் செய்திகள்