கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 9,012 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.

Update: 2021-07-26 16:53 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.
கிருஷ்ணகிரி அணை 
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்து மலர்தூவினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தார். மேலும் பொங்கி வந்த தண்ணீரில் மலர் தூவி வரவேற்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெடடி கூறியதாவது:-
120 நாட்களுக்கு திறப்பு 
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது, இடதுபுற பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அணையில் தற்போது உள்ள நீர் அளவை கொண்டும், நீர்வரத்தை எதிர்நோக்கியும் அணையில் இருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கனஅடியும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கனஅடியும் என மொத்தம் 180 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பையூர் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் சையத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்