கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.85 ஆயிரம் திருட்டு

திண்டுக்கல்லில், கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.85 ஆயிரம் திருட்டு போனது.

Update: 2021-07-26 16:37 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர், திண்டுக்கல்- நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி அருகே வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதியம் வரை மட்டுமே கடையில் வியாபாரம் நடந்தது.

 அதன்பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இதையடுத்து நேற்று காலை ஊழியர்கள் மீண்டும் வந்து கடையை திறந்தனர்.
அப்போது கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. 

மேலும் கடையின் மேற்கூரையில் துளை போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உரிமையாளர் ஸ்ரீராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கடைக்கு சென்று பார்த்தார். அங்கு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.85 ஆயிரம் காணாமல் போயிருந்தது.

 நள்ளிரவில் கடையின் மேற்கூரையை பிரித்து, அதற்கடுத்து இருந்த உள்கூரையில் துளையிட்டு, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உள்ளனர்.
பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஸ்ரீராம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பணத்தை திருடிய கொள்ளையர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் மின்சாதனத்தையும் எடுத்து சென்றது தெரியவந்தது. 

சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்