சத்தியமங்கலம் மின் மயானத்தை ஆக்கிரமித்த முட்புதர்கள் அகற்றம்- தொலைபேசியில் வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிரடி நடவடிக்கை
சத்தியமங்கலம் மின் மயானத்தில் முட்புதர்கள் ஆக்கிரமித்து பரவி கிடந்தது. இதுகுறித்து செல்போனில் தெரிவித்த புகாரை தொடர்ந்து முட்புதர்களை அகற்ற மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் மின் மயானத்தில் முட்புதர்கள் ஆக்கிரமித்து பரவி கிடந்தது. இதுகுறித்து செல்போனில் தெரிவித்த புகாரை தொடர்ந்து முட்புதர்களை அகற்ற மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கோட்டூவீரம்பாளையம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் அங்குள்ள பவானி ஆற்றின் கரையில் மின் மயானம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மின் மயானத்துக்கு பின்புறம் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து ஆக்கிரமித்து கிடந்தது. மேலும் அந்த பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பலர் பயன்படுத்தி வந்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது.
புகார்
இதுகுறித்து கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு செல்போனில் புகார் தெரிவித்தனர்.
உடனே அவர் இதுகுறித்து நகராட்சிக்கு நிர்வாகத்துக்கு தெரிவித்து மின் மயானத்தில் மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அகற்ற உத்தரவிட்டார்.
அகற்றம்
அவருடைய உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் பணியாளர்கள் மின் மயானத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். பின்னர் ஆக்கிரமித்து பரவி கிடந்த முட்புதர்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றி அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினர். மேலும் அந்த இடம் பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டது.
செல்போனில் தெரிவித்த புகாரை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.