பெங்களூருவில் முகக்கவசம் அணியாமல் சைக்கிளில் வலம் வந்த பா.ஜனதா எம்.பி.
முக கவசம் அணியாமல் தேஜஸ்வி சூர்யா எம்.பி. சைக்கிளில் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் இன்னும் கொரோனா 2-வது அலை நிறைவு பெறவில்லை. குறிப்பாக பெங்களூருவில் தற்போதும் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதால் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா முக்கவசம் அணியாமல் சைக்கிளில் வலம் வந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. இவர், பெங்களூருவில் சைக்கிளில் வலம் வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களில் முகக்கவசம் அணியாமல் தேஜஸ்வி சூர்யா இருக்கிறார். அவரது பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, முகக்கவசம் அணியும்படி அவருக்கு அறிவுறுத்தி பதிவிட்டு வருகின்றனர். மேலும் மக்கள் பிரதிநிதியான தேஜஸ்வி சூர்யாவே கொரோனா விதிமுறைகளை மீறலாமா? என்றும் இன்ஸ்டாகிராமில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.