மணப்பாறை அருகே அடிக்கடி சாலையில் திடீரென ஏற்படும் பள்ளங்களில் சிக்கும் வாகனங்கள்

மணப்பாறை அருகே சாலையில் திடீரென ஏற்படும் பள்ளத்தால் வாகனங்கள் சிக்கிக் கொண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவம், அதிகாரிகளின் அலட்சித்தால் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.;

Update: 2021-07-25 20:16 GMT

மணப்பாறை, 
மணப்பாறை அருகே சாலையில் திடீரென ஏற்படும் பள்ளத்தால் வாகனங்கள் சிக்கிக் கொண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவம், அதிகாரிகளின் அலட்சித்தால் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

சாலையில் திடீர் பள்ளம்

மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குளித்தலை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலையின் தொடக்கத்தில் சாலையின் மையப்பகுதியில் பல மாதங்களுக்கு முன் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு அதன் பின்னர் நீண்ட மாதங்களுக்கு பின்னர் தான் சரிசெய்து போக்குவரத்து சென்றது.
இந்தநிலையில் அந்த இடத்தில் எப்போது பள்ளம் விழும் என்று தெரியாத அளவில் அவ்வப்போது வாகனங்கள் வரும் போது திடீரென பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது.

சிக்கிக்கொள்ளும் வாகனங்கள்

இதே போல் ஆந்திராவில் இருந்து வையம்பட்டிக்கு கடப்பாகல் ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று காலை சம்மந்தப்பட்ட இடத்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் லாரி வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து ஒரு கிரேன் மற்றும் இரண்டு பொக்லைன் எந்திரம் மூலம் சில மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி பத்திரமாக மீட்கப்பட்டது. 

வாக்குவாதம்

இந்தநிலையில் அங்கு வந்த சுங்கச்சாவடி ரோந்து பணியாளர்களிடம் ஒரே இடத்தில் இதுபோன்று வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. ஆகவே அதை சரிசெய்யாமல் இருப்பது என்ன நியாயம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சாலை வழக்கம் போல் உள்ள நிலையில் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் திடீர் பள்ளத்தால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இதுமட்டுமின்றி விபத்தினால் பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை முறையை சரிசெய்து வாகனங்கள் விபத்தின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்