ரெயில்வே கேட் திடீர் பழுது; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சேரன்மாதேவியில் ரெயில்வே கேட் திடீரென பழுதானது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேரன்மாதேவி:
செங்கோட்டை - நெல்லை ெரயில் பாதையில் சேரன்மாதேவியில், பஸ் நிலைய சாலை மற்றும் புறவழிச் சாலைகளில் 2 ெரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளன. இதில் புறவழிச்சாலையில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள ெரயில்வே கேட் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பாலக்காட்டில் இருந்து நெல்லை நோக்கி வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ெரயிலுக்காக மூடப்பட்டது. அப்போது ெரயில்வே கேட்டின் ஒரு புறத்தில் உள்ள கேட் மட்டும் வேலை செய்த நிலையில், மற்றொரு புறத்தில் உள்ள கேட் வேலை செய்யவில்லையாம். இதனால் கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேரன்மாதேவி ரவுண்டானா பகுதியிலேயே வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, பஸ்நிலையம் வழியாக சென்னன. இதுகுறித்து நெல்லை ெரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணியாளர்கள் வந்து காலை 10 மணிக்கு பழுதை சரி செய்தனர். இதனால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.