பாதிரியாரை தொடர்ந்து கிறிஸ்தவ இயக்க நிர்வாகி கைது
பாதிரியாரை தொடர்ந்து கிறிஸ்தவ இயக்க நிர்வாகி கைது
அருமனை,
குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இந்து கடவுள்கள், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி ஆகியோரை அவதூறாக பேசியதோடு தி.மு.க. தேர்தல் வெற்றி குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையா, போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்த கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்பட 3 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் மதுரையில் வாகன சோதனையின் போது தப்பிச் செல்ல முயன்ற ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனையும் போலீசார் தேடி வந்தனர். அவர் நள்ளிரவில் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே நள்ளிரவில் அருமனை அருகே காரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ஸ்டீபன் இருந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் குழித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டீபன் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டார்.