தந்தை கண் எதிரே ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு

நாகர்கோவில் அருகே ஆற்றில் மீன் பிடிக்க விரித்த வலையை டிரைவர் எடுக்க சென்ற போது, தந்தை கண் எதிரே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-25 19:26 GMT
ஆரல்வாய்மொழி, 
நாகர்கோவில் அருகே ஆற்றில் மீன் பிடிக்க விரித்த வலையை டிரைவர் எடுக்க சென்ற போது, தந்தை கண் எதிரே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மீன் பிடிக்க
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடியை அடுத்த வீரநாராயண மங்கலம் ஆற்றுப்பாலம் அருகில் வசிப்பவர் முருகன். இவருடைய மகன் இசக்கிராஜ் என்ற ராஜூ (வயது 36), டிரைவர். இவர்கள் வீட்டின் அருகே பழையாறு உள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் மீன் பிடிப்பதற்காக ஆற்றில் நேற்று காலை வலையை இசக்கிராஜ் போட்டார். இந்த நிலையில் மதியம் ஆற்றில் போட்ட வலையை எடுக்க இசக்கிராஜ் தந்தையுடன் சென்றார்.
ஆற்றில் மூழ்கினார்
முருகன் கரையில் நிற்க இசக்கிராஜ் ஆற்றில் இறங்கி வலையை எடுத்து கையில் சுற்றிக்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் வந்தது. இதில் இசக்கிராஜ் இழுத்து செல்லப்பட்டார். அப்போது அவர் வலையில் சிக்கி வெளியே வரமுடியாமல் தந்தையின் கண் எதிலேயே தண்ணீரில் மூழ்கினார்.
அதை பார்த்த முருகன் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபய குரல் எழுப்பி கதறி அழுதார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றங்கரையில் திரண்டனர். இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாவு
தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) பென்னட்தம்பி தலைமையிலான 12 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி இசக்கிராஜை தேடினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இசக்கிராஜ் இறந்தது தெரிய வந்தது. அவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 
அப்போது கரையில் நின்ற இசக்கிராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 
விசாரணை
அதைத்தொடர்ந்து இசக்கிராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மீன் பிடிக்க போட்ட வலையை எடுக்க சென்ற போது, டிரைவர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்