சேலத்தில் கறிக்கோழி இறைச்சி விலை உயர்வு

சேலத்தில் கறிக்கோழி இறைச்சி் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.240-க்கு விற்பனையானது.

Update: 2021-07-25 19:20 GMT
சேலம்
சேலத்தில் கறிக்கோழி இறைச்சி் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.240-க்கு விற்பனையானது.
இறைச்சி விலை உயர்வு
சேலம் மாநகரில் பழைய பஸ் நிலையம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், பெரமனூர், குகை, கொண்டலாம்பட்டி, அழகாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை ஆனது. தற்போது ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதாவது, நேற்று மாநகரில் உள்ள இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையை கேட்டு அசைவ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோழி உற்பத்தி குறைவு
அதேநேரத்தில் ஆட்டு இறைச்சி வழக்கம்போல் ஒரு கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரைக்கும், நாட்டுக்கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. பண்ணைகளில் கறிக்கோழி உற்பத்தி குறைந்ததால் இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக அதன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை களை கட்டியது. ஆனால் இந்த வாரம் ஆடி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
அதேசமயம், சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்று மீன்கள் வாங்குவதற்காக ஏராளமானோர் வந்தனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். மீன்கள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்