நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்-குறைதீர்க்கும் முகாமில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
எலச்சிபாளையம்:
குறைதீர்க்கும் முகாம்
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் குழந்தை திருமணம், இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்செங்கோட்டில் நடந்தது. இதில் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு நகரம், திருச்செங்கோடு ஊரகம், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், மொளசி, பள்ளிபாளையம், குமாரபாளையம், வெப்படை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
இதனை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். முகாமில் அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1098, 181, 155260 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், ஏ.டி.எம். ரகசிய எண், வங்கி கணக்கு எண் குறித்து யாராவது கேட்டாலோ, பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறினாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக பணம் கேட்டாலோ இந்த எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் தவறாக புகைப்படம், வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் செல்போனில் அதிக நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது.
துப்பாக்கிகள்
திருச்செங்கோடு உட்கோட்டத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்தால் அதனை துணை போலீஸ் சூப்பிரண்டிடம் நாளை (அதாவது இன்று) மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. இதனை மீறி உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் இல்லாத துப்பாக்கிகள் வைத்திருக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
இதேபோல் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாதுபானங்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்தும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் நல கமிட்டி தலைவர் கோகிலவாணி, உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், லாரி உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.