வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தினால் உரிமம் ரத்து. போலீசார் எச்சரிக்கை
வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.;
வேலூர்
போக்குவரத்துக்கு இடையூறு
வேலுர் மாநகரில் நாளுக்குநாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரின் சாலைகள் அனைத்தும் குறுகிய சாலைகளாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து வேலூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
கூட்டத்தில், வேலூர் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். தொடர்ந்து, இதே தவறை 3 முறை செய்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இதுகுறித்து, சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விரைவில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அப்போது, விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகரில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றும் தொடர்பான கூட்டத்தை நடத்த போக்குவரத்துப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.