காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பரிசலில் பயணிக்கும் கிராம மக்கள்

காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியதால், கிராம மக்கள் பரிசல் மூலம் பயணம் செய்கின்றனர். அங்கு உயர்மட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-07-25 17:39 GMT
மேட்டுப்பாளையம்

காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியதால், கிராம மக்கள் பரிசல் மூலம் பயணம் செய்கின்றனர். அங்கு உயர்மட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

காந்தையாறு பாலம் 

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இதன் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி இருக்கிறது. நீர்த்தேக்க பகுதி வழியாகதான் ஆலூர், உளியூர், காந்தையூர், மொக்கைமேடு ஆகிய 4 கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.

 இந்த பகுதிகளுக்கு செல்லும் வழியில் காந்தையாறு குறுக்கிடுகிறது. எனவே அங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் 93 அடியை தாண்டும்போது இந்த சாலையின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கும். 95 அடியை தாண்டிவிட்டால் பாலம் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். 

தண்ணீரில் மூழ்கியது 

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தையூர் பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கியது.

அத்துடன் காந்தையாறு பாலமும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. பாலத்தின் மேல்பகுதியில் 4 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 

பரிசல் பயணம் தொடங்கியது 

இதன் காரணமாக அங்கு பரிசல் பயணம் தொடங்கி உள்ளது. 4 கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அந்தப்பகுதியில் விவசாய விளைநிலங்களுக்கு செல்பவர்கள் பரிசல் மூலம் பயணம் சென்று வருகிறார்கள். 

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரிசலில் செல்லும்போது காந்தையாறு என்ற ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். அங்கு குறைந்தது 25 அடி ஆழம் இருக்கும். இருந்தபோதிலும் வேறு வழியின்றி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- 

வாடிக்கையாகிவிட்டது 

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயரும்போது பாலம் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கையாகிவிட்டது. எனவே இந்த பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை. 

மேலும் லிங்காபுரம் சோதனைசாவடி அருகே வனப்பகுதி வழியாக மாற்று வழி இருக்கிறது. அங்கு காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அந்த வழியை பயன்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 6 மாதம் பாலம் தண்ணீரில் மூழ்கியும், 6 மாதம் வெளியே தெரிந்தும் காட்சியளிக்கிறது. 

உயர்மட்ட பாலம் 

இந்தப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களும் இருப்பதால் அங்கு சாகுபடி செய்து இருக்கும் காய்கறிகளை மூட்டைகட்டி பரிசலில் வைத்து ஏற்றி விவசாயிகள் கொண்டு வரும் நிலை நீடித்து வருகிறது. 

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தின் குறுக்கே உயர்மட்ட அளவுக்கு பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆர்.டிஓ. ஆய்வு 

இதற்கிடையே, கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன்,  தாசில்தார் ஷர்மிளா ஆகியோர் தண்ணீரில் மூழ்கிய அந்த பாலம் இருக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். 

அப்போது 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்