பவானி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், பவானி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டுப்பாளையம்
பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், பவானி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பில்லூர் அணை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.
இதனால் 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 97 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்தது
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது.
இதன் காரணமாக அணையின் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப் பட்டது. 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து ஆற்றுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக உள்ளது.
ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.