2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன் ஆய்வு செய்தார்.;

Update: 2021-07-25 16:46 GMT
கடலூர், 

கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெற இருந்த 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்வுகளை நடத்த அரசு உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

3794 பேர்

கடலூர் மாவட்டத்தில் 2808 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 986 பேர் என மொத்தம் 3794 பேர் இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்கிறார்கள். இந்த தேர்வை சென்னை ஆம்பூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன் மேற்பார்வையில், தேர்வு குழு தலைவரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான சக்தி கணேசன் தலைமையில் தேர்வு குழு உறுப்பினர்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், வனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஜெயிலர் அப்துல்ரகுமான், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்கிறார்கள்.
இதற்காக விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயத்திற்காக கோடு வரைதல், நீளம், உயரம் தாண்டுதலுக்கான ஏற்பாடுகளை செய்தல், நுழைவு வாயிலில் தடுப்பு கட்டைகள் அமைத்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது.

ஆய்வு

இந்த பணிகளை நேற்று போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உடற்தகுதி தேர்வுக்கு வரும் நபர்கள் எங்கு அமர வேண்டும். அவர்களை பிரித்து, ஓட்டப்பந்தயத்திற்கு அனுப்புதல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பி வைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் இது பற்றி டி.ஐ.ஜி. எழிலரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏமாற வேண்டாம்

2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை (இன்று) தொடங்குகிறது. இதில் 3,794 பேர் கலந்து கொள்கிறார்கள். கொரோனா பரவலை தடுக்க முதல் நாள் 500 பேருக்கு மட்டும் அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்கள் கொண்டு வர வேண்டும்.
தமிழ் பயிற்று மொழியில் கற்றதற்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் காலை 6 மணிக்குள் வந்து விட வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வு அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்கும். இளைஞர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
தேர்வில் முதலில் உயரம் சரிபார்த்தல், சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கும். பின்னர் 1500 மீட்டரை 7 நிமிடத்திற்குள் கடந்து வருவோர் மட்டும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த நீளம், உயரம் தாண்டுதல் போன்ற பல்வேறு தகுதித்தேர்வு நடக்கும்.
இவ்வாறு டி.ஐ.ஜி. எழிலரசன் கூறினார்.

மேலும் செய்திகள்