ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை விழுப்புரத்திலேயே அமைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தல்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை விழுப்புரத்திலேயே அமைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2021-07-25 16:43 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கார்க்கி, உறுப்பினர்கள் செங்குட்டுவன், அருணகிரி, நத்தர்ஷா, அகிலன், ரபி உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் நகரின் மையப்பகுதியான பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, இந்த பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மேம்படுத்தும என்று  அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.. ஆனால் இந்த பல்கலைக்கழகத்தை கலைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது என்ற அறிவிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்க...

மேலும் தொழில் வளர்ச்சிக்கான எந்த உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில் மனிதவள ஆற்றலை மேம்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட இப்பல்கலைக்கழகம் தனது முழுமையான பணியை தொடங்குவதற்கு முன்பே முடக்குவது மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

 எனவே தமிழக அரசு, இந்த பல்கலைக்கழகத்தை விழுப்புரத்திலேயே அமைத்தும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், இம்மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட மாணவர்களின் மனிதவள வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

மேலும் செய்திகள்