கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
சத்திரப்பட்டி அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார், புதுக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்தில் சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 45), விருப்பாட்சியை சேர்ந்த முருகன் (50), ஒட்டன்சத்திரம் கொல்லப்பட்டியை சேர்ந்த செந்தில்கணேஷ் (30) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ஒரு நாட்டுத்துப்பாக்கி இருந்தது. அது, கள்ளத்துப்பாக்கி என்று தெரியவந்தது. இதேபோல் 2 மான் கொம்புகள் இருந்தன. இதனையடுத்து துப்பாக்கி மற்றும் மான் கொம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள், சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மான்கொம்புகள் வைத்திருந்ததால், ஒட்டன்சத்திரம் வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.