அதிக பாரம் ஏற்றிசென்ற 14 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றிசென்ற 14 லாரிகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் அருகில் கேரளா உள்ளது.கேரளாவிற்கு செல்ல கோவை மாவட்டத்தில் இருந்து 12-க்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. இந்த சாலை வழியாக கனரக வாகனங்களில் அதிக அளவில் லோடு ஏற்றிச் செல்வதாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திற்கு புகார் வந்ததையடுத்து கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வழிகளிலும் வாகனங்களை சோதனை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் போலீஸ் சோதனைச்சாவடியில் கிணத்துக்கடவு போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 14 லாரிகள் அளவுக்கு அதிகமாக லாரிகளில் லோடு ஏற்றிச் சென்றதாக கண்டறியப்பட்டு அந்த லாரிகளின் உரிமையாளருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கிணத்துக்கடவு பகுதியில் இருந்து வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடி வழியாக கேரளா செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் அரசு அறிவித்துள்ள எடை அளவின்படி அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களுக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறுவதால் கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து லாரிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.