நீர்வரத்து எதிரொலி 30-வது முறையாக நிரம்பும் வைகை அணை

நீர்வரத்து காரணமாக வைகை அணை 30-வது முறையாக நிரம்ப உள்ளது.

Update: 2021-07-25 15:15 GMT

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதன் முழுக்கொள்ளளவாக 69 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த ஆண்டு தொடக்கம் முதலே அணையில் நீர்மட்டம் 60 அடிக்கும் மேலே காணப்படுகிறது. 
இதன்காரணமாக ஜூன் முதல் வாரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 
இந்த மாத தொடக்கத்தில் வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டிய போது கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பிறகு நீர்மட்டம் 68.50 அடியை எட்டியபோது, கடந்த 23-ந்தேதி 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
30-வது முறையாக நிரம்புகிறது
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.61 அடியாக இருந்தது. இதனால் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 1,052 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 769 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், வைகை அணை இன்னும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அப்போது 3-வது கட்ட வெள்ளஅபாய எச்சரிக்ைக விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரி நீராக ஆற்றில் திறக்கப்படும். வைகை அணை கட்டிய 1958-ம் ஆண்டு முதல் ஏற்கனவே  29 முறை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 
இந்தநிலையில், தற்போது 30-வது முறையாக அணை நிரம்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்