வால்பாறையில் மழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

வால்பாறையில் மழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

Update: 2021-07-25 14:57 GMT
வால்பாறையில் மழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்
வால்பாறை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணை முழு கொள்ளளவையும் தாண்டி நிரம்பிய நிலையில் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் 2-வது நாளாக  வால்பாறையில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பயிற்சி கலெக்டர் சரண்யாவும் இருந்தார்.


இவர்கள் வால்பாறை பகுதியில் பெய்து வரக்கூடிய தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், ஆஸ்பத்திரியில் இருக்கும் மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்து வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் பாபுலட்சுமணிடம் சிகிச்சை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து வால்பாறை பழைய பஸ்நிலையம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான குடியிருப்புகள், மழை காலங்களில் டீசல் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தக்கூடிய இடங்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ வசதிகள் குறித்தும் தேவைப்படக்கூடிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப பணியாளர்களின் நிலைகுறித்தும் கேட்டறிந்தனர்.

வால்பாறை பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக இருக்கக்கூடிய ஒரேஅரசு ஆஸ்பத்திரி என்பதால் தங்குதடையின்றி பொது மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை மருத்துவர் டாக்டர் மகேஷ்ஆனந்தியை கேட்டுக் கொண்டனர். 
கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மூலமாக தேவைப்படக்கூடிய சிகிச்சை வசதிகள் குறித்து ஆலோசனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமையும் பார்வையிட்டு பொது மக்களை தங்கவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதற்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாசில்தார் ராஜாவுக்கு உத்தரவிட்டார். 

மழை காலங்களில் பாதிப்புக்குள்ளாகி வரும் வால்பாறைஅரசு போக்குவரத்து கழக டெப்போ பகுதியையும் ஆய்வு செய்து மழைகாலங்களில் தண்ணீர் உள்ளே நுழைந்து விடாமல் தடுப்பு நடவடிக்கை எடுப்பது குறித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.


இதனை தொடர்ந்து அணலி எஸ்டேட் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்கள் மழை காலங்களில் தரைப்பாலத்தை ஆபத்தான நிலையில் கடந்து வரவேண்டியுள்ளதால் அந்த பகுதியில் புதிதாக பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக அணலி எஸ்டேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்