தாத்தா பேத்தி பலி
குடிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா, பேத்தி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடிமங்கலம், ஜூலை.26-
குடிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா, பேத்தி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தாத்தா, பேத்தி
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள கோட்டமங்கலத்தை சேர்ந்தவர் கனகசபாபதி வயது 64. இவருடைய மகளுக்கு திருமணமாகி பல்லடம் அருகே உள்ள ஜல்லிபட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கனகசபாபதி தன்னுடைய மோட்டார்சைக்கிளில் மகளை பார்க்க ஜல்லிப்பட்டி சென்றார். பின்னர் அங்கு மகளைப்பார்த்துவிட்டு பேத்தி அனன்யாவை 9 தன்னுடன் மோட்டார்சைக்கிளில் கோட்டமங்கலத்திற்கு அழைத்து வந்தார்.
பரிதாப சாவு
பல்லடம்- உடுமலை ரோட்டில் பெரியபட்டி அருகே அவர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தேங்காய் தொட்டி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் திடீரென்று அங்குள்ள நிறுவனத்திற்கு திருப்பி உள்ளார்.
அப்போது லாரி கனகசபாபதி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கனகசபாபதியும், அவருடைய பேத்தி அனன்யாவும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாத்தா மற்றும் பேத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகேசை 40 கைது செய்தனர். லாரி மோதிய விபத்தில் தாத்தா, பேத்தி இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-