துவாக்குடியில் பரபரப்பு கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து என்ஜினீயர் தற்கொலை

துவாக்குடியில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-07-25 02:38 GMT

திருவெறும்பூர், 
துவாக்குடியில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ரசாயன என்ஜினீயர்

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் வசிப்பவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் செந்தில்குமார்(வயது 44). இவரது மனைவி கிருத்திகா. இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை.

வெளிநாட்டில் ரசாயன என்ஜினீயராக பணியாற்றி வந்த செந்தில்குமார் கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு செல்லவில்லை. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமாரின் மனைவி, அவரை பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் செந்தில்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துவந்தார்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோரை இட்லி வாங்கி வரும்படி ெசந்தில்குமார் கடைக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பொதுமக்கள் தீயை அணைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

தீக்குளித்து தற்கொலை

இதில் செந்தில்குமார் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமார் தற்கொலை செய்வதற்காக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு, தீயை பற்ற வைத்து, அதை வெடிக்கச்செய்ததும், இதில் அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்