போரூர் மேம்பாலத்தில் கவிழ்ந்த டிராக்டர்
போரூர் மேம்பாலத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த கண்ணபாளையத்தில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் டிராக்டரை ஓட்டி வந்தார். போரூர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. டிராக்டர் டிரைவர் சாமுவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காலை நேரம் என்பதால் அந்த வழியாக அதிக அளவில் வாகனங்கள் செல்லவில்லை. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படவில்லை.
பின்னர் மேம்பாலத்தில் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.