கோவில்களில் 5 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை
கோவில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவை
கோவில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவில்களில் அமைச்சர் ஆய்வு
தமிழக இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை கோவை வந்தார். பின்னர் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருதமலையில் தேவஸ்தான அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், கணினி அறை, விளையாட்டு திடல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கோவில்களில் குடமுழக்குகள் நடைபெறாத கோவில்களையும், ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் நிறைவடைந்து திருப்பணிகள் செய்யப்பட வேண்டிய கோவில்களையும் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக திருப்பணிகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராஜகோபுரம் அமைக்கும் பணி
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல வயதானவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்கப்படும். வனபத்திரகாளியம்மன் கோவிலை பொறுத்தவரையில் கடந்த 2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து இடைப்பட்ட காலத்தில் 2014-15-ம் ஆண்டில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது வரை பணி நிறைவு பெறாமல் உள்ளது.
எனவே இதற்கான கட்டுமான பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவில்களுக்கு குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதற்கும், ஆன்மிக மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
பணி நிரந்தரம்
கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், பிறநிலங்கள், கடைகள் ஆகியவற்றை குத்தகைக்கு எடுத்து இருப்பவர்களிடம் முறைப்படி வாடகை, குத்தகை தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருப்பவர்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் பணி உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையில் பணியில் இருக்கும்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணை அடிப்படையில் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு மாதங்களுக்குள் 75 சதவீத பணி நியமனங்கள் நிரப்பப்படும்.
மேலும் கோவில்களுக்கு சொந்தமான யானைகளை கால்நடை மருத்துவர்களால் 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. யானைகள் குளிப்பதற்கு குளியல் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவில் யானைகளுக்கு தேவைப்பட்டால் புத்தாக்க பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு கால பூஜை நிச்சயம்
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கோவில்கள், அதன் உபகோவில்களுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக குற்றாலீஸ்வரன் கோவிலின் கீழ் நெல்லையில் உள்ள 3 கோவில்கள் உப கோவில்களாக இணைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 539 கோவில்கள் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ள கோவில்கள் என கணக்கிடப்பட்டு உள்ளன. வருமானத்தை பொறுத்து கோவில்கள் உபகோவில்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நிச்சயம் நடைபெறும்.
கோவில்களுக்கு யானைகள் வேண்டும் என்றால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி காடுகளில் உள்ள யானைகளை கோவில்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அரசு அனுமதி பெற்று யானைகளை வளர்த்து வருபவர்கள் கோவில்களுக்கு தானமாக வழங்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்ள இந்துசமய அறநிலையத்துறை தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், இணை ஆனையாளர் செந்தில்வேலவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.