முதல்-மந்திரியாக பதவி ஏற்கும்படி பா.ஜனதா தலைவர்கள் என்னுடன் ஆலோசிக்கவில்லை; பிரகலாத் ஜோஷி பேட்டி
முதல்-மந்திரியாக பதவி ஏற்கும்படி என்னுடன், பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசிக்கவில்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: முதல்-மந்திரியாக பதவி ஏற்கும்படி என்னுடன், பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசிக்கவில்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பிரகலாத் ஜோஷியை நியமிக்க...
கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரியாக, பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மத்திய மந்திரியாக இருந்து வரும் அவா், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால், அந்த சமுதாயத்தை சேர்ந்தவரையே அடுத்த முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும் பா.ஜனதா மேலிடம் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பிரகலாத் ஜோஷியை முதல்-மந்திரியாக நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
என்னுடன் ஆலோசிக்கவில்லை
முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா மேலிடம் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பா.ஜனதாவில் நிரந்தர தலைவர் என்று யாரும் கிடையாது. இதற்கு முன்பு பா.ஜனதா தேசிய தலைவர்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித்ஷா இருந்துள்ளனர். தற்போது ஜே.பி.நட்டா தேசிய தலைவராக இருந்து வருகிறார். பிரதமராக நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான முடிவுகளை பிரதமர், தேசிய தலைவர் எடுத்து வருகின்றனர்.
முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. முதல்-மந்திரியாக பதவி ஏற்கும்படி என்னுடன், இதுவரை பா.ஜனதா மேலிட தலைவர்கள் யாரும் ஆலோசிக்கவும் இல்லை. நான் தான் அடுத்த முதல்-மந்திரி என்று நீங்கள் (நிருபர்கள்) தான் சொல்கிறீர்கள். வதந்திகளுக்கும், தேவையில்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.