கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு; நஞ்சுண்டேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் தண்ணீரில் மூழ்கியது

கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

Update: 2021-07-24 21:36 GMT
மைசூரு: கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 

கபினி அணை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல, கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,280 தண்ணீர் உள்ளது. இணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

16 கால் மண்டபம் மூழ்கியது

கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபிலா ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள், பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நஞ்சன்கூடுவில் உள்ள கபிலா ஆற்றங்கரையோரம் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலின் 16 கால் மண்டபம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியுடன் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.

மேலும் செய்திகள்