சார்மடி மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை
தொடர் கனமழை காரணமாக சார்மடி மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
சிக்கமகளூரு: தொடர் கனமழை காரணமாக சார்மடி மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
சார்மடி மலைப்பாதை
கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சிக்கமகளூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சார்மடி மலைப்பாதையில் 7-வது வளைவில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், மங்களூரு-பெங்களூரு சாலையில் சிராடி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன், போக்குவரத்தும் சார்மடி மலைப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சார்மடி மலைப்பாதையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இரவு நேரத்தில் தடை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சார்மடி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் அதிகமாக வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சார்மடி மலைப்பாதையில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து தடை செய்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரவு 7 மணிக்கு பிறகு சார்மடி மலைப்பாதையில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
வாகன ஓட்டிகள் அவதி
கலெக்டர் உத்தரவை தொடர்ந்து நேற்று இரவு முதலே சார்மடி மலைப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சார்மடி மலைப்பாதை தொடங்கும் மூடிகெரே தாலுகா கொட்டிகேஆரா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அறிவிப்பு பற்றி அறியாமல் ஏராளமான வாகனங்கள் சார்மடி மலைப்பாதை வழியாக வந்தன.
அப்போது அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார், வாகனங்களை தடுத்து நிறுத்தி திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர். ஆம்புலன்சை தவிர எந்த வாகனங்களுக்கும் இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இந்த திடீர் அறிவிப்பால் கடும் அவதிக்குள்ளாகினார்கள். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.