கிராமத்தில் சுற்றித்திரிந்த 6 அடி நீள முதலை பிடிபட்டது

கிராமத்தில் சுற்றித்திரிந்த 6 அடி நீள முதலையை மீன்பிடி வலை மூலம் பிடித்தனர்.

Update: 2021-07-24 21:22 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வேம்பங்குடி ஊராட்சியில் உள்ள குழவடையான் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சித்தேரி என்ற குளம் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த குளத்தில் முதலை ஒன்று இருப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தது. அந்த முதலை அருகில் உள்ள கீழணையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த முதலை, இரவு நேரங்களில் குழவடையான் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்துள்ளது. பகல் நேரத்தில் மீண்டும் குளத்திற்கு வந்துள்ளது. இது பற்றி ஜெயங்கொண்டத்தில் உள்ள வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து வன அலுவலர்கள் அந்த குளத்தில் முதலையை 2 நாட்களாக கண்காணித்தனர். ஆனால் முதலை குளத்தை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து முதலை குளத்தை விட்டு வெளியே வந்தால், தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம், வன அலுவலர்கள் கூறிச்சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை அணைக்கரை கீழணையில் உள்ள விநாயகன் தெருவை சேர்ந்த 5 மீனவர்களை கொண்டு குளத்தில் முதலையை பிடிக்கும் முயற்சியை பொதுமக்கள் தொடங்கினர். இதில் குளத்தில் மீன்பிடி வலை மூலம் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்பிடி வலையில் சுமார் 6 அடி நீளமும், சுமார் 200 கிலோ எடையும் கொண்ட முதலை சிக்கியது. இதுபற்றி ஊராட்சி தலைவர் ரமேஷ், உடனடியாக மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு போலீசார் வந்தனர். இதையடுத்து மீன்பிடி வலையில் சிக்கிய முதலையை பத்திரமாக மீட்டு, சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அணைக்கரை கீழணையில் உள்ள தண்ணீரில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்