லாரிகளில் இருந்து சாலையில் விழும் சுண்ணாம்பு கற்களால் வாகன ஓட்டிகள் அவதி
வி.கைகாட்டி பகுதியில் லாரிகளில் இருந்து சாலையில் விழும் சுண்ணாம்பு கற்களால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
வி.கைகாட்டி:
சாலையில் விழுந்த சுண்ணாம்பு கற்கள்
அரியலூர் மாவட்ட பகுதிகளில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு சிமெண்டு ஆலைகளுக்கு செல்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் இருந்து வி.கைகாட்டி வழியாக அரியலூர் சாலையில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து சுண்ணாம்புக் கற்கள், தவறி சாலையில் விழுந்து உடைந்து சிதறின.
வாகன ஓட்டிகள் அவதி
அந்த நேரத்தில் லாரியின் அருகில் வாகனங்களில் யாரும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் கிடந்த சுண்ணாம்பு கற்களால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். பின்னர் அந்த வழியாக சென்ற நபர்கள் சாலையில் சிதறி கிடந்த சுண்ணாம்பு கற்களை அகற்றி சென்றனர்.
சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச்செல்லும் போது லாரிகளில் தார்ப்பாய்கள் கட்டாததால் இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. எனவே லாரியில் ஏற்றிச்செல்லும் சுண்ணாம்பு கற்கள் சாலையில் தவறி விழுவதை தடுக்க, அதிக பாரம் ஏற்றிச்செல்வதை தடுத்து, பாதுகாப்பாக கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.