பாதை பிரச்சினையில் தந்தை- மகன்களுக்கு கத்திக்குத்து
மீன்சுருட்டி அருகே பாதை பிரச்சினையில் தந்தை- மகன்களை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள உடையார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 62). விவசாயியான இவரது வீடும், அதே தெருவை சேர்ந்த தங்கசாமியின் மனைவி ராமாமிர்தத்தின்(70) வீடும் அருகருகே உள்ளது. மேலும் அவர்களுக்கு இடையே பாதை தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல்(30), வீரசந்துரு(21) ஆகியோர் தங்களது நிலத்திற்கு உரம் போடுவதற்காக டிராக்டரில் எரு குப்பைகளை எடுத்துக்கொண்டு, ராமாமிர்தம் வீட்டின் முன்புள்ள பாதை வழியாக வந்துள்ளனர். அப்போது ராமாமிர்தம், அவரது மகன் சேகர்(55), பேரன் தர்மசீலன்(30) ஆகியோர், சக்திவேல் மற்றும் சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கத்திக்குத்து
மேலும் ஆத்திரம் அடைந்த சேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் முதுகில் குத்தியதாகவும். அதை தடுக்கச்சென்ற சுப்பிரமணியத்தையும், வீரசந்துருவையும், தர்மசீலன் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன், சக்திவேல், வீரசந்துரு ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வீரசந்துரு கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) குணசேகரன் வழக்குப்பதிவு செய்து சேகர் மற்றும் தர்மசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மோட்டார் சைக்கிள் எரிப்பு
இதேபோல் மீன்சுருட்டி போலீசில் சேகரின் மனைவி கலையரசி கொடுத்த புகாரில், தர்மசீலன், சேகர் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சுப்ரமணியனின் மகன் வீரசந்துரு எரித்து விட்டதாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, ேசகரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.