அதிகபட்சமாக சிற்றார் 2 அணை பகுதியில் 68 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையில் அதிகபட்சமாக சிற்றார் 2 அணை பகுதியில் 68 மில்லி மீட்டர் பதிவானது. சூறைக்காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையில் அதிகபட்சமாக சிற்றார் 2 அணை பகுதியில் 68 மில்லி மீட்டர் பதிவானது. சூறைக்காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. மேலும் நேற்று காலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. நாகர்கோவிலில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் மழை காரணமாக சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளித்தன. அதிலும் குறிப்பாக அவ்வைசண்முகம் சாலை மிகவும் மோசமாக வயல்வெளி போல் காட்சி அளித்தது. அதோடு சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது.
68 மில்லி மீட்டர்
குமாி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 2 அணை பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல் பிற இடங்களில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி-32.8, களியல்-12, கன்னிமார்-34.2, கொட்டாரம்-33.2, குழித்துறை-22, மயிலாடி-49.2, நாகர்கோவில்-38, புத்தன்அணை-36.8, சுருளோடு-40, தக்கலை-13, குளச்சல்-11.2, இரணியல்-26.2, பாலமோர்-40.4, ஆரல்வாய்மொழி-15, கோழிப்போர்விளை-26, அடையாமடை-9, குருந்தன்கோடு-28.2, முள்ளங்கினாவிளை-35, பேச்சிப்பாறை-32.4, பெருஞ்சாணி-37.2, சிற்றார் 1-52.6, மாம்பழத்துறையாறு-39, முக்கடல்-30 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் காலை 511 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று காலை 1,193 கனஅடியாக அதிகரித்தது. இதே போல 221 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 1,141 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 4 கனஅடி தண்ணீர் வருகிறது.
அதே சமயத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை 632 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீரும் பாசன கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டு உள்ளது.
மரக்கிளை முறிந்து விழுந்தது
மழையின் போது சூறைக்காற்று வீசியதால் நாகர்கோவில் இருளப்பபுரம் பாவலர் நகரில் ஒரு மரத்தின் கிளை முறிந்து அருகே இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினர்.