75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறப்பு
தஞ்சை மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நூலகங்கள் திறக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் நூலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் நூலகங்களை திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் நேற்று முதல் திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்தது.
மகிழ்ச்சி
அதன்படி 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டன. இதனால் வாசகர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் நேற்றுகாலை 8 மணிக்கு திறக்கப்பட்டது.
நூல் இரவல் பிரிவு, குறிப்புதவி நூல் பிரிவு, சொந்த நூல் பிரிவு செயல்பட்டது. நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
கையுறை
வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு இருந்தனர். இதற்கு முன்பு வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி சென்று எடுத்து படித்து வந்தனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக வாசகர்கள் நூல்களை நேரடியாக எடுக்க அனுமதிப்படவில்லை.
அவர்களுக்கு தேவையான நூல்களை நூலக பணியாளர்களே எடுத்து கொடுத்தனர். நூலகர்கள், நூலக பணியாளர்கள் முககவசம், கையுறை அணிந்து பணியாற்றினர். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பலர், வந்திருந்து குறிப்புகளை எடுத்து சென்றனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 58 கிளை நூலகங்கள், 48 ஊர்ப்புற நூலகங்கள், 4 பகுதிநேர நூலகங்களும் திறக்கப்பட்டன. நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.