அறச்சலூரில் லஞ்சம் வாங்கி கைதான, கிராம நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்
அறச்சலூரில் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலரை பணிஇடை நீக்கம் செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை மேற்கொண்டார்.
அறச்சலூரில் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலரை பணிஇடை நீக்கம் செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை மேற்கொண்டார்.
லஞ்சம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அஞ்சூர் பாண்டிலிங்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், வடுகப்பட்டி வடக்கு வீதி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் தனக்கு சொந்தமான வீட்டை விற்க தனிப்பட்டா மாறுதல் கேட்டு மனு கொடுத்தார். கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் பட்டா மாறுதலுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு புவனேஸ்வரி ரூ.30 ஆயிரம் கொடுக்க சம்மதித்தார்.
இதைத்தொடர்ந்து முதல் தவணையாக ரூ.19 ஆயிரத்தை கூகுள்பே மூலம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலுக்கு லஞ்ச பணத்தை செலுத்தி உள்ளார். இந்த நிலையில் மீதி பணத்தையும் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்து தரப்படும் என்று வெற்றிவேல், புவனேஸ்வரியிடம் போனில் மிரட்டி உள்ளார்.
பணிஇடை நீக்கம்
இதுபற்றி புவனேஸ்வரி ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி கடந்த 20-ந்தேதி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை புவனேஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூகுள்பே மூலம் வெற்றிவேல் லஞ்ச பணம் பெற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருடைய வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையில் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை பணிஇடை நீக்கம் செய்து, ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள வெற்றிவேலிடம் வழங்கப்பட்டது.