மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்து தாய் தற்கொலை
மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த தாய், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த திட்டக்குடி சாப்ட்வேர் என்ஜினீயரும் பலியானார்.
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் பிரதாபன்சிங் மகன் ரவிராஜா (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் மலேசியா கோலாலம்பூரில் பணிபுரிந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ரவிராஜாவிற்கும், சத்யாவிற்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குகதாரணி(6) என்ற மகள் இருந்தாள். கடந்த 5 ஆண்டுகளாக ரவிராஜா குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ரவிராஜா உள்பட 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ரவிராஜாவின் உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையுடன் தற்கொலை
சத்யா மற்றும் குழந்தை குகதாரணி வீட்டில் தனிமைபடுத்தப்பட்டனர். வீட்டில் தனிமையில் இருந்த சத்யா கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள சத்யா முடிவு செய்தார். இது தொடர்பாக அவர், தனது கணவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் சத்யா, தனது குழந்தையுடன் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து குழந்தை குகதாரணியுடன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாப்ட்வேர் என்ஜினீயரும் பலி
இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவிராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உடல்நிலை மேலும் மோசமானது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவிராஜாவும் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி அறிந்ததும் திட்டக்குடியில் உள்ள ரவிராஜாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் திட்டக்குடியே சோகத்தில் மூழ்கி உள்ளது.