கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 58 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.;
வடலூர்,
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர், மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டத்தில் 7 உட்கோட்ட காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
கடைகளுக்கு சீல்
அந்த வகையில் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையது அபுதாகிர், வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வடலூரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்கள் விற்றதாக வடலூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 35), வடலூர் பால்காரன் காலனியைசேர்ந்த முருகன்(52) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 கடைகளும் சீல் வைக்கப்பட்டது.
நல்லூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக சிவக்குமார், சுப்பிரமணியன், கண்டபங்குறிச்சியில் சீனிவாசன், வேப்பூர் கூட்டுரோட்டில் சரவணன் ஆகிய 4 பேரையும் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு கைது செய்தார். மேலும் வேப்பூர் தாசில்தார் செல்வமணி முன்னிலையில் 4 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆவட்டி கூட்டுரோட்டில் புகையிலை பொருட்கள் விற்றதாக அரிதாஸ்(65), எழுத்தூரில் மாயவன்(34) ஆகிய 2 பேரையும் ராமநத்தம் போலீசார் கைது செய்தனர்.
58 பேர் கைது
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெட்டிக்கடைகளிலும், மளிகை கடைகளிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்து புகையிலை பொருட்களை விற்றதாக மொத்தம் 58 பேர் கைது செய்யப்பட்டனர். வருவாய்த்துறை மூலம் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.